Breaking News

ராஜபக்ஷர்களின் யுகம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுடன் முடிவடையும்: குமார வெல்கம


 அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு ராஜபக்ஷர்களின் யுகம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


குமார வெல்கம மேலும் கூறியுள்ளதாவது, “நாடு தற்போது முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலைமைகளில் இருந்து, பஷில் ராஜபக்ஷவால் நாட்டை மீட்க முடியாது. பஷிலால் மட்டுமல்ல இந்த அரசாங்கத்திலுள்ள எவராலும் அதனைச் செய்ய முடியாது.

கடந்த அரசாங்கத்தில் பஷில் இருந்தார். அப்போது அவர் செய்தது என்ன? ராஜபக்‌ஷக்களுக்கு அரசாங்கத்தில் இன்னொரு பதவியை வழங்கும் செயற்பாடே இது. முழு நாட்டையும் ராஜபக்‌ஷக்களுக்கு வழங்கும் செயற்பாடு.

மஹிந்த ராஜபக்‌ஷவை தவிர்த்து ஏனைய ராஜபக்‌ஷக்கள் அனைவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே. பஷில், சிராந்தி, புஸ்பா அல்லது ராஜபக்‌ஷக்களின் குடும்பத்தில் தற்போது பிறந்திருக்கும் குழந்தைகள்; அரசியலுக்கு வந்தாலும், நாட்டை நாசமாக்குவதைத் தவிர்த்து அவர்களால் வேறு எதனையும் செய்ய முடியாது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இணையான கட்சி ஒன்றை அமைப்போம். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக இருக்கும்போதே எதனையும் செய்யவில்லை. அமைச்சர் பதவிகளைக் கொண்டா எதனையும் செய்துவிடப் போகிறார்? அவர் வெறும் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதே நல்லது.” என்று கூறியுள்ளார்.

No comments