Breaking News

கோட்டகோகம போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய பெண்ணின் கடவுச்சீட்டு பறிமுதல்

 


விசா நிபந்தனைகளை மீறியதற்காக, பொதுமக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளித்த வெளிநாட்டவரின் கடவுச்சீட்டை இலங்கை குடிவரவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


இந்நிலையில், குறித்த வெளிநாட்டவரை விசாரணைக்காக குடிவரவுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்த காணொளியை கெய்லி ஃப்ரேசர் என்ற பிரித்தானிய பெண் வெளியிட்டுள்ளார்.


ஒரு குடிவரவு அதிகாரி அந்த பெண்ணிடம் மருத்துவ காரணங்களுக்காக விசா வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார், ஆனால் மருத்துவ காரணங்களுக்காக அவர் உண்மையில் நாட்டில் இருந்தாரா என்ற சந்தேகம் உள்ளது.


விசாரணை நடத்தி கடவுச்சீட்டு திரும்ப ஒப்படைக்கப்படும் என இந்த அதிகாரி கூறியுள்ளார். வெளிநாட்டவர் தனது கடவுச்சீட்டைப் பெறுவதற்கு 7 நாட்களுக்குள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கவனத்தை ஈர்த்ததற்காக தான் துன்புறுத்தப்படுவதாக அந்த பெண் காணொளியில் கூறியுள்ளார்.

இதேவேளை, ஒரு நல்ல சுற்றுலாப் பருவத்தை இலங்கை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற பிரச்சினைகளைத் தவறாகக் கையாள்வது அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  


No comments